டெங்கு பாதித்தவர்களை அதிகம் தாக்கும் கொரோனா - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
ஊரடங்கு உள்ளிட்டமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளபோதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இருக்கும் சிக்கல் முழுமையாக தீர்க்கப்படவில்லை.
டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்டர்களுக்கு கொரோனா வைரஸ் 2 மடங்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக பிரேசில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சார்ஸ் கோவிட் 2 வைரஸின் 2வது அலை உலகளவில் இந்தியாவை கடுமையாக தாக்கியுள்ளது. தொடர் பரவல் காரணமாக நாள்தோறும் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு உள்ளிட்டமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளபோதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இருக்கும் சிக்கல் முழுமையாக தீர்க்கப்படவில்லை.
தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் சிகிச்சை கிடைக்காமலேயே இறக்கும் அவலநிலையும் அரங்கேறி வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வரும் நிலையில் தற்போது அதனால் ஏற்பட்டுள்ள பக்கவிளைவுகளான கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை தொற்று மேலும் பீதியை கிளப்பியுள்ளது. வீட்டில் முடங்கியிருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற சூழல் இருப்பதால், இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவது குறித்து உலகளவில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பிரேசிலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிர்ச்சிகரமான முடிவு கிடைத்துள்ளது.
அதாவது, டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், இரு மடங்கு ஆபத்துகள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிரேசிலில் உள்ள சா பாலோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், மான்சியோ லிமா (Mancio Lima) பகுதியில் இந்த ஆய்வை மேற்கொண்டனர். ஏக்கர் மாகாணத்தின் மிகச்சிறிய நகரமான லிமாவில் 1, 285 பேரிடம் டெங்கு வைரஸூக்கு எதிரான ஆன்டிபாடிகளையும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தமாதிரிகளையும் சோதனைக்காக எடுத்துக்கொண்டனர்.
இந்த ஆய்வின் முடிவில் டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் இரு மடங்கு ஆபத்துகளை எதிர்கொள்வதை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து பேசிய பையோமெடிக்கல் சயின்ஸ் பேராசிரியர் மார்சிலோ அர்பானோ பெராரியா ( Marcelo Urbano Ferreira), "டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும்போது அதிக பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். இது இரண்டு தொற்றுநோய்களுக்கும் இடையில் இருக்கும் சினெர்ஜிக் தொடர்பு காரணமாக ஒன்று மற்றொன்றின் விளைவுகளை அதிகரிக்கிறது.
டெங்கு வைரஸைக் கட்டுபடுத்துவதற்கு கொரோனா மிகப்பெரிய தடையாக இருக்கிறது. மற்றொருபுறம், டெங்கு பாதித்தவர்களை கொரோனா மிகப்பெரிய அளவில் பாதிக்கிறது" எனக் கூறினார். டெங்கு வைரஸூக்கு எதிரான ஆன்டிபாடிகள், கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரத்தை அதிகப்படுத்துவதாகவும், மக்கள் குழு மற்றும் சமூக புறச்சூழல் காரணிகள் காரணமாக இருக்கலாம் என Clinical Infectious Diseases இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கு, டெங்கு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதிலும் பங்காற்றியுள்ளதாகவும், இந்த இரண்டு வைரஸ்களும் ஒரே நேரத்தில் மக்களை தாக்கி பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசுகள் இது குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பேராசிரியர் மார்சிலோ பெராரியா கேட்டுக்கொண்டுள்ளார். 2019 நவம்பர் முதல் 2020 நவம்பருக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த ரத்த மாதிரிகள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டன. நவம்பர் 2019 ஆம் ஆண்டுக்குப் முன்பு டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த 37 விழுக்காடினரில், 35 விழுக்காட்டினர் நவம்பர் 2020-க்கு முன்னதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்ததை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.